ஓம். விநாயகர் துதி.

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
– திருமூலர் – திருமந்திரம் (10.1)

[ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.]

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.
– கபிலதேவர் – மூத்தநாயனார் திரு இரட்டை மணிமாலை (11.20.1)

[ஆனை முகத்தானை அன்புடன் தொழுதல், செல்வம் செழிக்கச் செய்யும்; செய்யத் தொடங்கும் செயல் இடையூறின்றி இனிது முடியச் செய்யும்; குற்றமற்ற சொற்களைப் பேசும் உயர்ந்த சொல்வன்மையும் புகழும், பெருமையும் உருவாக்கும்; ஆதலால். வானோரும் ஆனை முகத்தானை அன்புடன் கைகூப்பித் தொழுவர். பிள்ளையாரைத் தொழாத பொழுது செய்கருமம் கை கூடுதல் அரிது என்பது குறிப்பு. ]

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
– ஔவையார் – மூதுரை (1)

[உடலை மிகவும் வருத்திக் கொள்ளாமலே, சாதாரண பூக்களால், சிவந்த திருமேனி கொண்ட தும்பிக்கைப் பெருமானின் பாதம் பணிந்து, தவறாமல் அர்ச்சிப்பவர்களுக்குப் பேச்சுத்திறமை உண்டாகும்; மனம் தூய்மையாகும்; திருமகளின் கடைக்கண் அருட் பார்வை கிடைக்கும்.]

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலா மெளிதின் முற்றுறக்
கண்ணுத லுடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்.

– கச்சியப்ப சிவாச்சாரியார் – கந்தபுராண்ம் (2.8)

[பூமியில் பிறப்பதற்குக் காரணமான மலமென்ற மாசு அகல, எண்ணத்தில் உதிக்கும் நற்காரியங்கள் யாவும் தடையின்றி நடந்து முற்றுப்பெற, நெற்றியில் கண்ணுடையவரும் யானையின் முகம் கொண்டவரும் இசைவடிவானவருமாகிய விநாயகரின் மலர் போன்ற பாதங்களைப் பணிந்து போற்றுவோமாக.]

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம் .

(தலம் – திருமுதுகுன்றம்)
– துறையூர் ஞானக்கூத்தர் – விருத்தாசல புராணம்

[செல்வமும், கல்வியும், புகழும் தழைக்கும்படியும் உள்ளத்தில் அன்பு மலரவும், தீமையை மனம் வெறுக்கவும், உள்ளம் முதிர்ச்சியடைந்து விவேகம் வெளிப்படவும் அருள்பெருகும் திருமுதுகுன்றம் எனும் தலத்தில் எழுந்தருளி இருக்கும் ஆழத்துப் பிள்ளையார் எனும் பெயர்கொண்ட விநாயகரைப் பேணி வழிபடுவோம்.]

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.

– ஔவையார் – நல்வழி

[அழகு பொருந்திய (பிரணவ சொரூபியென்ற) பெருமை வாய்ந்த யானை முகம் கொண்ட தூய்மையான மாணிக்கம் போன்ற விநாயகப் பெருமானே! நான் உனக்குப் பசும்பாலும், தெளிந்த தேனும் வெல்லப்பாகும் பருப்புமாகிய நான்கு பண்டங்களும் கலந்து நிவேதனமாகத் தருவேன். நீ எனக்கு சங்கம் வளர்த்த இயல், இசை, நாடகமென்ற மூன்றுவகைத் தமிழறிவையும் அருள்வாயாக.]

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே.

– அருணகிரிநாதர் – விநாயகர் துதி – திருப்புகழ்

[கையில் நிறைந்துள்ள பழம், அப்பம், அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானை முகக் கடவுளின் திருவடிகளை (முதலில்) வணங்கி அறிவு நூல்களைக் கற்கும் அடியவர்களுடைய புத்தியில் வாழ்பவனே, நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சமே என்று உன்னைத் துதி செய்தால் வினைகள் யாவும் விரைவில் ஓடிப் போய்விடும்.

ஊமத்த மலரும், (பிறைச்) சந்திரனும் சடையில் தரித்த சிவபெருமானுடைய மகனும், மற்போருக்குத் தக்க திரண்ட தோள்களையுடையவனும், மத யானையை ஒத்த பலம் பொருந்தியவனும், மத்தளம் போன்ற பெருவயிறு உடையவனும், உத்தமியாகிய பார்வதியின் மகனும் ஆகிய கணபதியைத் தேன் துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டு நான் வணங்குவேன்.

இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும், மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதன் முதலாக எழுதிய முதன்மையானவனே, (அசுரர்களின்) திரி புரங்களையும் எரித்த அந்தச் சிவ பெருமான் (விநாயகரைப் பூஜிக்க மறந்ததால்) அவர் சென்ற ரதத்தின் சக்கர அச்சை ஒடித்துத் தூளாக்கிய மிகுந்த தீரனே,

(வள்ளி மீது கொண்ட காதலாகிய) அந்தத் துயரத்தோடு (உன் தம்பியாகிய) சுப்பிரமணியன் நடந்த அந்தத் தினைப் புனத்திடையில் யானையாகத் தோன்றி, அந்தக் குற மகளாகிய வள்ளியுடன் அந்தச் சிறிய முருக வேளை அத்தருணத்திலேயே மணம் புரியுமாறு திருவருள் பாலித்த பெருமாளே.]

உம்பர்தரு தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலில் தேனமுதத் துணர்வூறி
இன்பரசத்தே பருகிப் பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே
தம்பி தனக்காக வனத்தணைவோனே
தந்தை வலத்தா லருள்கை கனியோனே
அன்பர் தமக்கான நிலைப் பொருளோனே
ஐந்து கரத் தானை முகப் பெருமாளே

– அருணகிரிநாதர் – விநாயகர் துதி – திருப்புகழ் (1.3)

[விண்ணவர் உலகில் உள்ளதாகிய, வேண்டியன எல்லாம் கொடுக்கும் கற்பகதரு, காமதேனு , சிந்தாமணி இவைகளைப் போல உளம் கனிந்து, ஒளி வீசும் கடலில் தோன்றிய இனிய அமுதம் போன்ற உணர்வு என் உள்ளத்தே ஊறி, அதனாற் பிறக்கும் இன்பச் சாற்றினை நான் உண்ணும்படி பலமுறையும் எனது உயிரின் மீது ஆதரவு வைத்து அருள்வாயாக,

தம்பியின் பொருட்டுக் காட்டில் சஞ்சரித்தவனே! தந்தையை வலஞ் செய்ததால் கையில் அருளப்பெற்ற பழத்தை உடையவனே! அன்பர்களுக்கு வேண்டிய நிலைத்த பொருளாய் உள்ளவனே! ஐந்து கரங்களையும் ஆனை முகத்தையும் கொண்ட பெருமாளே!]

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்

(தலம் – காஞ்சி)
– கச்சியப்ப சிவாச்சாரியார் – கந்தபுராண்ம் (1.1)

[அழகுமிக்க பத்துத் திருக்கரங்களும் ஐந்து திருமுகங்களும் கொண்ட சிவபெருமான் முப்புரம் எரிக்கச் சென்றபோது அவருடைய தேரின் ஒரு சக்கரமாக அமைந்ததும், தாமரை நாயகன் எனப்படுவதுமான சூரியனைப் போன்று ஒளி வீசும் மாணிக்கத்தைத் தனது தலையில் கொண்டு அசையும் பாம்பைத் தன் இடையில் அணிந்திருக்கும், விகடசக்கரன் என்ற பெயர் கொண்ட, விநாயகர் எனும் உண்மைப் பொருளைப் போற்றி வணங்குவோம்.] 

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான் – விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து
-கபிலதேவர் – மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை (11.20.5)

[விநாயகனே வெம்மை போல் வருத்தும் பிறவிப் பிணியைத் தரும் வினைப் பயனை வேருடன் களைய வல்லவன்; விநாயகனே அவா எனும் வேட்கையைத் தணிக்க வல்லவன்; விநாயகனே விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் தலைவன்; ஆகையினால் அவரைக் கண்ணிற் கண்டு அன்போடு பணிந்து வணங்குவோமாக.]